புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், இலவசமாக வழங்கப்பட்டு வந்த பேருந்து சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் 20 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நாளை பல்கலைகழக பட்டமணிப்பு விழாவிற்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்துக்கொள்வதால் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் வெளியில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை புதுச்சேரி போலிஸார் வழுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
இருப்பினும், தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய போலிஸார் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் மாணவர்களுக்கும் போலிஸாருக்கும் இடையே வாக்குவாத முற்றியதை அடுத்து போலிஸார் மாணவர்களைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்வி கட்டண உயர்வை கண்டித்து போராடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும், அத்துமீறி கைது செய்து தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் புதுச்சேரி அனைத்து மாணவர் மற்றும் இளைஞர் இயக்கத்தின் சார்பாக நாளை பட்டமளிப்பு விழாவிற்கு புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு வருகை தரும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறுகையில், “கணினி அறிவியல் படிப்புக்கு 225 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைப்போலவே M.A., M.Com., Msw முதலான படிப்புகளுக்கும் சுமார் 10,000 ரூபாய் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள்.
இதனால் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவு பாழாக்கப்படும். எங்கள் எல்லோரின் கனவும் வீண் போகும். இதனைக் கருத்தில் கொண்டுதான் போராட்டத்தை துவங்கினோம்.
ஆனால் நாளை குடியரசுத் தலைவர் வருவதால் எங்களை போராடக்கூடாது என்கிறார்கள். நாளை மீண்டும் எந்த எதிர்ப்பு வந்தாலும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு அரசியல் கட்சியினர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.