தி.மு.க இளைஞரணி தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் ராஜா வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.கவினர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வருவதையொட்டி தென்சென்னை இளைஞரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.கவினர், தி.மு.க ஒட்டிய போஸ்டர்களை கிழித்ததுடன் சென்னை கே.கே.நகரில் உள்ள தி.மு.க இளைஞரணி தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் ராஜா வீட்டிற்கு இன்று 11 மணி அளவில் சிலர் வந்து கற்களை வீசியுள்ளனர்.
அந்நேரம் வீட்டில் இருந்த பெண்கள் கதவுகளை மூடி உள்ளனர். மேலும், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வீட்டின் முன் வந்த அ.தி.மு.கவினர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து கற்களை வீசியுள்ளனர்.
காவல்துறை வருவதற்கு முன்னதாக அங்கிருந்த ரவுடிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக தி.மு.க இளைஞரணி நிர்வாகி பிரபாகர் ராஜா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.