சென்னைக்கு அடுத்தபடியாக மீன் விற்பனைக்கு பிரபலமானது மதுரை கரிமேடு மீன் சந்தை. இங்கு மீன்கள் கெடாமல் இருப்பதற்காக அதன் மீது ஃபார்மாலின் எனும் ரசாயனம் தெளிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரிமேட்டில் உள்ள 53 மீன் கடைகளில் நேற்றிரவு சோதனை நடத்தினர். அதில், பெரும்பாலான கடைகளில் உள்ள 2 டன்னுக்கு மேலான மீன், நண்டு மற்றும் இறால் மீது ரசாயனம் தெளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்கள் மீதும் மீன் வியாபாரிகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரிக்கை விடுத்து, ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மீன் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், “கரிமேட்டில் முதல் முறை சோதனை நடப்பதால் எச்சரிக்கை விடுத்துள்ளோம். இனி ஃபார்மாலின் கலந்த மீன்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். இங்கு பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இனி ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் வந்தால் திருப்பி அனுப்பிவிடுங்கள்.
விரைவில் கரிமேட்டில் ஒரு சோதனைக் கூடம் அமைக்கப்படும். லாரிகளில் வரும்போது சோதனை செய்யப்பட்டாலும், சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்கு முன்பு சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும்.” எனக் கூறினார்.
இந்தச் சோதனை மதுரை மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அசைவ உணவுகளில் மீன்களை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் மதுரைக்காரர்கள். ஆகையால், மீன்களில் ஃபார்மாலின் கலக்கப்படுவது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வெறும் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என பத்தோடு பதினொன்றாக கூறிச் சென்றிருக்கிறார்.
ஏற்கெனவே சென்னையில் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்களை கட்டுப்படுத்தாமல் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டி வருகிறது. தற்போது மதுரையிலும் ரசாயன மீன் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டும் எப்போது அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துத் தடுக்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது.