குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தை வன்முறையாக மாற்றி டெல்லியை கலவர பூமியாக்கியுள்ளது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.
இந்த வன்முறையில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட மதரீதியான தாக்குதலுக்கு உலக நாடுகள் வரை தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் பா.ஜ.க ஆதரவாளர்கள் டெல்லி கலவரத்தை இஸ்லாமியர்கள் தூண்டிவிட்டதாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது டெல்லி கலவரம் குறித்துப் பேசிய பிரேமலதா, “சி.ஏ.ஏ சட்டம் பற்றி மக்களுக்கு போதிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனவே, அந்த சட்டத்தின் நிலை என்ன, அதனால் என்னென்ன நடக்கும் என்பது பற்றிய முழு விவரங்களை மத்திய, மாநில அரசுகள் முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் இந்த சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமரும் முதல்வரும் தெரிவித்துள்ள நிலையில் அதை நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தினால் ஏதாவது சிறுபிரச்சனை ஏற்பட்டால் கூட தே.மு.தி.க முதல் ஆளாக களத்தில் இறங்கும்” எனத் தெரிவித்தார்.
பிரேமலதா கடைசியாகச் வார்த்தைகள் இதற்கு முன்பாகவே கேட்டது போலத் தேன்றும். இதே வார்த்தையைத்தான் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாகப் போராடுவேன் என வீரவசனம் பேசினார்.
அதற்குப் பிறகு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலிஸ் தடியடித் தாக்குதல் நடத்தியது. அப்போது வாய்மூடி மௌனம் காத்த ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், தற்போது பிரேமலதா கூறியிருப்பதும் வழக்கமான சமாளிப்பு பாணி பேச்சே எனக் கூறப்படுகிறது. நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர் எனக் கூறப்பட்ட நிலையில் பிரமலதாவின் இந்தப் பேச்சு சக கட்சித் தொண்டர்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்துக்கு பதிலாக கட்சியை பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். பா.ஜ.கவுடனான கூட்டணியை அக்கட்சித் தொண்டர்களே விரும்பாத நிலையில், இப்போதும் பா.ஜ.க ஆதரவு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுவார் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்கின்றனர்.