கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகியாகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.
மேலும் கோவை வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் ஏராளமான பெண் மற்றும் ஆண் துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அங்கு பணியாற்றி வந்த துப்புரவு பெண் தொழிலாளிகளிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார் பா.ஜ.க நிர்வாகி. அப்படி இருக்கையில், கடந்த புதன்கிழமையன்று இரவு பெண் ஒருவர் வழக்கம் போல கழிவறையை சுத்தம் செய்யச் சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் ஜோதியும் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது துப்புரவு பணியில் பெண் இருப்பதை அறிந்த ஜோதி அந்த பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். பின்னர் பெண்கள் கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முன்றுள்ளார் ஜோதி.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட, சத்தமிடாதே என மிரட்டியுள்ளார். தொடர்ந்து சத்தம் போட்டதால் கோபமடைந்த ஜோதி அந்தப் பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் பா.ஜ.க நிர்வாகி ஜோதி மீது எஸ்.சி/எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி, பாலியல் பலாத்கார வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.