சென்னை திருவொற்றியூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி (57) உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
மறைந்த கே.பி.பி.சாமி, கடந்த 2006-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவர். தி.மு.க மாநில மீனவர் அணிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் கே.பி.பி.சாமி.
2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட கே.பி.பி.சாமி வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினரானார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவரது மறைவு குடும்பத்தினரையும், தி.மு.க நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்குச் சென்று உடல்நலம் விசாரித்துச் சென்றிருந்தார். இந்நிலையில், அவரது மறைவு தன்னை துக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக தி.மு.க தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த கே.பி.பி.சாமிக்கு உமா என்ற மனைவியும், இனியவன், பரசு பிரபாகரன் என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவியும், மூத்த மகன் இனியவனும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். அவரது மகள் திருமணமாகி தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.