கொடைக்கானல் மலைக்கிராமங்களில் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை போலி பட்டாக்கள் மூலம் ஆக்கிரமித்தவர்களின் நில உரிமையை ரத்து செய்து நிலத்தை மீட்ட கொடைக்கானல் கோட்டாட்சியர் சுரேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு வருடத்திற்கு முன்பு வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றவர் சுரேந்திரன். இவர், அப்பகுதியில் பட்டா வழங்குவது, மாற்றம் செய்வதில் நடந்த பல்வேறு முறைகேடுகளைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தார்.
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை போலி பட்டாக்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளவர்களின் நில உரிமையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 530 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
மேலும், முறைகேடுகளுக்கு துணைபோன வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர், நிலஅளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார் கோட்டாட்சியர் சுரேந்திரன்.
இதற்கிடையே, வருவாய் அலுவலர்களின் தூண்டுதலின் பேரிலும், உயர்மட்ட ஊழல் பெருச்சாளிகளின் தூண்டுதலின் பேரிலும், ஆளுங்கட்சி பிரமுகர்களின் அழுத்தத்தினாலும் சுரேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், முறைகேட்டை வெளிக்கொண்டுவந்த கோட்டாட்சியர் சுரேந்திரன் புதிதாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் கோட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.