தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் வில்சன் எம்.பிக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உச்சநீதிமன்றமும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் இதற்கு ஆதரவு கொடுக்காத காரணத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கடந்த 19ஆம் தேதி அன்று நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் நேரடியாக கோரிக்கை வைத்தார்.
அதில் சட்ட ஆணைய பரிந்துரையின் அடிப்படையில், வழக்கறிஞர்களுக்கு ஆகும் பயணச் செலவு, வழக்கு செலவுகளை குறைக்கும் வகையில் உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கையை ஏற்று ஆதரவளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் கடிதத்தில் உறுதி அளித்துள்ளார்.