தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம், போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் கடிதம் அளித்துள்ளார் தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ராஜீவ்காந்தி சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஐ.டி நிறுவனங்களால் அப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை தினசரி 1 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.
சென்னை பெருநகர் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள 5 சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற கால விரையம் ஏற்படுகிறது.
பெருங்குடி ஓ.எம்.ஆர் சாலை சுங்கச்சாவடி, துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலை சுங்கச்சாவடி, சோழிங்கநல்லூர் ITEL சுங்கச்சாவடி, சோழிங்கநல்லூர் ஈ.சி.ஆர் சுங்கச்சாவடி, உத்தண்டி சுங்கச்சாவடி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றும்படி அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மக்களின் கோரிக்கையை ஏற்று, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.