தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நான்காவது நாளாக இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பின்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது.
பின்னர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சர் கடந்த பிப்வரை 10 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்திற்கான பதில் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.
காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கலாம் என்பது இந்த சட்டத்தில் கொண்டு வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் பாதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் துறைமுகம் பைப் லைன், உள்ளிட்டவை இந்த சட்டத்தில் கட்டுப்படாது என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த சட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் வராது என்பதற்கு என்ன நிச்சயம்?
இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் டெல்டா மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடுபட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?
அதேபோல விவசாய பிரதிநிதிகள் 3 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. அவர்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. விவசாய நிலங்களை விற்பதற்கு தடை ஏதும் இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருக்கிறதா?
நடைமுறையில் உள்ள பழைய ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும். குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், காஸ் நிறுவனங்கள் அமைப்பது குறித்த வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டது.
அதேபோல் தற்போது இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு சட்டரீதியாக, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பான உண்மையான வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்துகிறோம்.” என பேசினார்.
மேலும் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள் என்று நேற்றே அறிவித்தேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை தேர்வுக் குழுவிற்கு அனுப்பினால் மட்டுமே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதால் மீண்டும் அதை நான் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதற்கு முதல்வர் பதில் அளித்தார். அப்போது, “ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறுத்துவது குறித்து, சட்ட ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து, அதில் சட்ட சிக்கல்கள் அதிகமாக இருப்பதால் தற்போது அதைப் பற்றி குறிப்பிடவில்லை. முதலில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய 341 எண்ணெய் கிணறுகள் இருப்பது உண்மைதான். ஹைட்ரோகார்பன் வேறு எண்ணெய் கிணறு வேறு. 1985 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் கிணறு உற்பத்தி தொடங்கி செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக அரசு சட்ட முன் வடிவை தேர்வுக் குழுவிற்கு அனுப்பாததைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவு கொண்டு வந்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதை முழுமையாக நிறைவேற்ற நாங்கள் துணை நிற்போம். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு குரல் கொடுப்பார்கள்
ஆனால் தற்போது இந்த சட்ட முன்வடிவில் உள்ள சட்டச் சிக்கல்கள், இடையூறுகளை எப்படி தளர்த்தப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினோம். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுடன் கலந்து பேசி, சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்த பிறகே இந்த சட்ட முன்வடிவை கொண்டுவரவேண்டும். அதற்காக தேர்வுக் குழுவை அமைத்துப் பேசவேண்டும்” எனத் தெரிவித்தார்.