தொலைக்காட்சித் தொடர்களில் வரும் நாடகங்கள் பெரும்பாலும் குடும்பங்களைச் சார்ந்தவையாகவே இருப்பதால் அதனை தவறாமல் பார்க்கும் பட்டாளம் அதிகம் உள்ளன. சமயங்களில், அதில் வருவது போலவே நடந்துக்கொள்வதால் பல்வேறு பிரச்னைகளும் நடைபெறுகின்றன.
பெரும்பாலும் பெண்களே டிவி சீரியல்களை பார்ப்பதால் அதில் வரும் சில காட்சிகள் அவர்களுக்கு மனதளவில் பதிவதால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக நடந்தேறி வருகிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் மதுரையில் நடந்துள்ளது. மதுரை காமராஜபுரத்தில், வீட்டில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா மேலத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (43). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த லட்சுமி, லேமினேஷன் செய்யும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
லட்சுமி தங்கியிருக்கும் வீட்டில் டிவி வசதி இல்லாததால் பக்கத்து வீட்டுக்குச் சென்று சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவும் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று மும்முரமாக சீரியல் பார்த்திருந்திருக்கிறார்.
அப்போது, லட்சுமியின் வீட்டில் ஏற்றி வைத்திருந்த விளக்குத் தீ, துணியில் பட்டு தீப்பிடித்திருக்கிறது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து, தீ மளமளவென பரவியதை அறிந்திராத லட்சுமி வீட்டுக்குள் சென்றதும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த லட்சுமியின் உடலை மீட்டு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கீரைத்துறை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.