நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைவான சொத்து வரி வசூலித்ததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் சிறிய அளவில் வீடு கட்டி, அதற்கான கடனைச் செலுத்தி வரும் மக்களுக்கு அதிக சொத்து வரியை விதிக்கும் மாநகராட்சி, நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த அளவில் சொத்து வரி விதிப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த மக்கள் சட்ட உரிமை கழகம் என்ற அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஒரு நாள் இரவு தங்குவதற்காக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 6 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சொத்து வரி விதிக்கப்படுகிறது.
அறைகளின் கட்டண விவரங்களை ஹோட்டல்கள், தங்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ள போதும், அதை விட மிகக் குறைவான கட்டணங்களை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, திருமண மண்டபங்கள், ஒரு திருமண நிகழ்வுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக கூறி குறைவான வரி விதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குறைந்த வரி விதிப்பதால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மாநகராட்சி சொத்துவரி விவகாரம் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரைத்தது.