கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. டெல்லி ஷாகின்பாக் போராட்டத்தைப் போல, தமிழகத்திலும் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, போலிஸாரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
அமைதியாக போராடியவர்களை தாக்குதல் நடத்தி வன்முறையாக்கிய தமிழக காவல்துறையும் அ.தி.மு.க அரசை கண்டித்து விமர்க்கப்படும் வேலையில், நடிகர் ரஜினியும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
அதற்கு காரணம் மோடி அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு நிலைபாடு எடுத்ததும், இந்த குடியுரிமை சட்டத்தால் இஸாமியர்களுக்கு பாதிப்பில்லை, ஒருவேலை இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக போராடுவேன் என அவர் அளித்த வாக்குறுதியுமே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார். அதில், ’குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்துக்குள் புகுந்து தடியடி நடத்தியுள்ளது.
ஜனநாயகப்பூர்வமாக நடந்த போராட்டத்தை சீர்குலைத்து அச்சுறுத்தும் போக்கை காவல்துறை கைவிட வேண்டும் என்றும், குடியுரிமை பறிப்பு சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியது அ.தி.மு.க அரசா? RSS அரசா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், ’இஸ்லாமியருக்கு பாதிப்பென்றால் சும்மா இருக்கமாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அவர்களே, நேற்றைய இரவு இஸ்லாமியர் மீது நடத்திய போலிஸ் தடியடி உங்களுக்குத்தெரியாதா? போலிஸைக் கண்டிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தாக்குல் சம்பவம் பற்றி நடிகர் ரஜினி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பியதும், ட்விட்டரில் பலரும் ரஜினி எங்கே? என கேள்வி கேட்டதும் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது.