மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தைப் போல அமைதியான முறையில் தொடர்ந்து நடக்கவிருந்த போராட்டத்தை போலிஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதில் பலர் காயமடைந்தனர். காவல்துறையினரின் இந்த செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி, நேற்றைய தினம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலிஸாரைக் கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலந்தூர், கிழக்கு கடற்கரைச் சாலை, அண்ணாசாலை, காஞ்சிபுரம், வேலூர் திண்டுக்கல்லில் இரவு 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. குறிப்பாக, திருச்சி, நீலகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, நாகர்கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, கடலூர், திருப்பூர், மற்றும் தஞ்சையில் போராட்டம் நடைபெறுகிறது. பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.