சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸார் நடத்திய தடியடியை கண்டித்து, ஏராளமான இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். நெரிசலில் ஒருவர் பலியானார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்களையும் போலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தி.மு.க மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “நாள்தோறும் இது “அம்மாவின் அரசு” என்று பேட்டி அளித்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியில், அவருக்கு வாக்களித்த பொதுமக்கள், தங்களது உரிமைக்காக போராடிய தருணத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழக அரசே போராடியவர்கள் மீது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருப்பதை காணும்போது நாமெல்லாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.