அ.தி.மு.க அரசு, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 1,500 மதுக்கடைகளை மூடும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடங்களில் புதிய மதுக்கடைகளைத் திறந்து வருவாய் குறையாமல் பார்த்துக்கொண்டது தமிழக அரசு.
கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 2,295 டாஸ்மாக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் வரையில் தமிழகத்தில் 5,197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய கடைகளை திறந்திருப்பதன் மூலம் அ.தி.மு.க அரசின் மதுவிலக்கு கொள்கை கேள்விக்குறியாகிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயித்து மதுபான வகைகளை விற்பதிலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க அரசு.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று செய்வது வேறாக அ.தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 3 ஆண்டுகளில் 2,000-க்கும் மேலான TASMAC கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்!
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அ.தி.மு.க போட்டு வரும் இரட்டை வேடம் இது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.