தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN), அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நிர்வாகத்தில் இன்றைக்கு தன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்கமுடியாத அவல நிலைமைக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
“தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN) அதன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க ஆட்சியின் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் சிக்கி ஏற்கனவே “டான்செம்” உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிதைந்து கொண்டிருக்கின்ற வேளையில், இப்போது டாமின் நிறுவனமும் நிதி நெருக்கடியில் முடங்கிப் போயிருக்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலகத்தில் வாடகைக்கு இருக்கும் டாமின் தலைமை அலுவலகம் - அந்த வாரியத்திற்கு வாடகையைக் கூட முறையாகச் செலுத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால், 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு, டாமின் நிறுவனத்தின் கீழ் உள்ள குவாரிகளை இயக்க முடியவில்லை. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அதனுடைய வரலாறு காணாத கடும் நெருக்கடிக்கு “டாமின்” நிறுவனம் உள்ளாகி நிலைகுலைந்து போயிருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகமே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடனில் மாட்டி, நிதி நெருக்கடி நிலைமை நிலவுகிறபோது, பொதுத்துறை நிறுவனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அ.தி.மு.க அரசு அதலபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருப்பது கடும் கண்டத்திற்குரியது. “யாருக்கும் யாரும் பொறுப்பல்ல” என்ற ரீதியில் அரசுத் துறைகள் மட்டுமல்ல; பொதுத்துறை நிறுவனங்களும் அதிமுக ஆட்சியில் செயல்படுவதால் தமிழகம் தொழில் துறையில் வீழ்ச்சியடைந்து வேலைவாய்ப்புகளையும் இழந்து நிற்கிறது.
“605 சதவீத லாபத்தில் டாமின் நிறுவனம் இயங்குவதாக” இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த வள்ளலார் ஐ.ஏ.எஸ் இரு வருடங்களுக்கு முன்பு ஒரு வாரப்பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நிர்வாகத்தில் இன்றைக்கு டாமின் நிறுவனம் தன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்கமுடியாத அவல நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது. வடசென்னைப் பகுதியில் உள்ள டாமினுக்குச் சொந்தமான நிலத்தை விற்று இனிமேல் சம்பளம் கொடுக்கலாமா என்று அமைச்சர் ஆலோசித்து வருவதாக வரும் செய்திகள் அதைவிட கொடுமையாக இருக்கிறது.
ஆகவே “வெட்டிப் பேச்சுகள்” “வீண் உளறல்களை” தவிர்த்து விட்டு, டாமின் குவாரிகளை இயக்குவதற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளை உடனடியாகப் பெற்று, இன்னும் சொல்லப்போனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இருக்கும் அ.தி.மு.க அரசு - பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்றவாவது முன்வர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனமான “டாமின்” நிலங்களை விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.