தமிழ்நாடு

"கழிவுநீர் சுத்திகரிப்பு பணிக்கு இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்குக” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளுக்கு மாவட்ட வாரியாக நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கழிவுநீர் சுத்திகரிப்பு பணிக்கு இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்குக” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்கள் வாங்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 கோடி ரூபாயை ஒதுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரிய மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சி, 121 நகராட்சிகளில் ஆறு இடங்கள் தவிர மற்ற அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கழிவுநீர் சுத்திகரிப்பு பணிக்கு இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்குக” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

அதேபோல, 136 நகர்ப்புற உள்ளாட்சிகளில், 130 உள்ளாட்சிகள், திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 63 ஆயிரத்து 372 வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனவரி முதல் நவம்பர் வரை பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் 21 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய நூற்றுக்கணக்கில் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் நகராட்சிகளில் சாக்கடை சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளிக்க, இரு நகராட்சிகளின் ஆணையர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திரங்கள் வாங்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 கோடி ரூபாயை ஒதுக்கவேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories