நடிகர் விஜய்யின் மீது தொடர்ந்து அவதூறுகளையும், பொய் பிரச்சாரத்தையும் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தனர். ஆனால் இதில் விஜய் வீட்டில் எதுவும் பணம், ஆவணங்கள் எதுவும் கிடைக்காதபோதும் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு அவரது சொத்துகளை முடக்கவேண்டும் என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கூறிவந்தனர்.
இதனிடையே, ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்குத் திரும்பிய நடிகர் விஜய்க்கு தொல்லை கொடுக்கும் நோக்கில் பா.ஜ.க-வினர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று போராட்டம் நடத்தினர். விஜய் படத்தின் ஷூட்டிங்கிற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்றும், அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்றும் 15 பேர் கூடி ஆர்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தி பரவிய நிலையில், விஜய்க்கு எதிராகப் போராடுவதாக நினைத்து, பா.ஜ.கவினர் படத்திற்கு இலவச விளம்பரம் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு எதிராக விளம்பர நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.கவினருக்கு அக்கட்சியில் புதிதாக இணைந்த இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குனர் பேரரசு வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பா.ஜ.கவினர் நடத்திய போராட்டம் தேவையற்றது. விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல!
இதுபோன்ற செயல்பாடுகள் பா.ஜ.கவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனையைத் தரும். நாட்டில் போராடவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன” எனக் கடுமையாக சாடினார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த இயக்குனர் பேரரசுவின் இந்தப் பதிவுக்கு பதில் சொல்லமுடியாமலும், அவரை திருப்பி தாக்க முடியாமலும் பா.ஜ.கவினர் தினறிவருகின்றனர். பா.ஜ.கவில் உள்ள பல பிரபலங்களும் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பா.ஜ.க சமூக ஊடகப் பிரிவின் தமிழக தலைவர் நிர்மல் குமார், “குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான ஆதரவு பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை விஜய் படத்துக்கு எதிரான போராட்டமாக சித்தரித்து விட்டதாக” தெரிவித்துள்ளார். இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகி பின்வாங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.