சென்னை கண்ணகி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புறத்தில் வெள்ளையடித்து அழகான கிராஃபிட்டி ஆர்ட் என அழைக்கப்படும் சுவர் ஒவியம் வரையும் பணி துவங்கியுள்ளது.
அதற்காக தற்போது 7 கட்டிடம் வரை தேர்வு செய்து ஓவியம் வரையும் பணிகள் துவங்கியுள்ளன. பெரிய சுவர்களில் ராட்சத கிரேன் துணையுடன் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர். இந்தப் பணியை சென்னை மாநகராட்சி துணையுடன் ‘செயின்ட் + ஆர்ட் இந்தியா’ என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை மண்டல நிர்வாகி ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “கலைகளை பொது இடங்களுக்கும், அறிமுகமில்லாத பகுதிகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும், இது பரந்த பார்வையாளர்களை பெற உதவும்.
இந்தச் சுவர்களில் வரைப்படும் ஓவியங்கள் நகரத்தின் கலாச்சாரத்துடன் இணையும். இந்த இடங்களில் நடத்தப்படும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகள் குடியிருப்புவாசிகளுக்கும் பங்கேற்பு உணர்வைத் தருகின்றன.
அதுமட்டுமின்றி, ஓவியங்கள் இப்பகுதிக்கு அழகியல் தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் குடியிருப்புவாசிகளை சுகாதாரமாக உணர வைக்கும். நகரங்களின் பூர்வீக பாரம்பரியம், கலை, கலாச்சாரம் மற்றும் மக்களின் வாழ்வியல் சூழல் ஆகியவற்றை இந்த கலை பிரதிபலிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஐதராபாத், டெல்லி மற்றும் மும்பையின் தாராவி உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகவும் செயின்ட் + ஆர்ட் இந்தியாவின் சிறப்பு திட்ட இயக்குநர் விகாஸ் நக்ராரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.