சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சைக்கோ’. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற இளைஞராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் அற்புதமான இசையில், பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன்...’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் கேட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.
திரையில் இந்தப் பாடலை உதயநிதி ஸ்டாலின் பாடும்போது, ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் உதடுகளை அசைக்கும் அளவிற்கு பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், லயோலா கல்லூரியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினை இன்று சந்தித்தனர். அப்போது, பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிக்கும் பார்வையற்ற மாணவர் இளையசெல்வம், ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன்’ பாடலைப் பாடியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், “ ‘நாங்கள் லயோலா மாணவர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். ‘சைக்கோ’ பார்த்தோம். உங்களை சந்திக்க வேண்டும்’ என்றனர். சந்தித்தேன். பி.ஏ. ஆங்கில இலக்கிய மாணவர் இளையசெல்வம், ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன்’ பாடினார். உண்மையில் உருகித்தான் போனேன். நன்றி ராஜா சார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.