திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் தனி வீடுகளில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்துள்ளார். ரகசியமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் போன்ற பகுதிகளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து இந்தச் சம்பவத்தை ஆளும் அ.தி.மு.க பிரமுகர் செய்வதாகவும் தகவல் கிடைத்து விசாரித்தபோது, அவர் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட பிரிதிநிதியாக பொறுப்பு வகித்துவரும் பிரேமா என்பதும் தெரியவந்தது.
பிரேமா, உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராகவும் உள்ளார். தனக்கிருக்கும் அதிகாரத்தையும், ஆளுங்கட்சி செல்வாக்கையும் பயன்படுத்தி இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு அதிரடியாகச் சென்ற போலிஸ் படை, பிரேமாவை பொறி வைத்து பிடித்தது. பின்னர் கைது செய்யப்பட்ட பிரேமாவை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் ஆளும் கட்சியின் பல முக்கிய புள்ளிகளும் சிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது திருப்பத்தூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.