பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கொடுத்திருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா நிர்வாகம் ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சமூகம் சார்ந்து பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். பா.ஜ.க அரசுக்கு எதிராக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணா எழுதிய ‘Sebastian and Sons’ என்ற புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட, கலாக்ஷேத்ரா அரங்கில் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னை பெசண்ட் நகர் கலாக்ஷேத்ரா வளாகத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது.
‘Sebastian and Sons’ புத்தகம் மிருதங்கம் செய்யும் கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுவதாகக் கூறப்படுகிறது.
மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும் நிலையில் அதைச் செய்பவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவும், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப் புனிதமாகக் கருதும் உயர்சாதியினராகவும் இருக்கும் அரசியல் பற்றியும் அந்தப் புத்தகம் பேசுகிறது.
இந்நிலையில், அப்புத்தகத்தின் கருத்துகள் சில சர்ச்சைக்குரியவையாக உள்ளதாக, புத்தக வெளியீட்டுக்கு முன்பு வழங்கிய அனுமதியை ரத்து செய்து கடிதம் அனுப்பியுள்ளது கலாக்ஷேத்ரா நிர்வாகம்.
இந்நிலையில், இதுகுறித்துக் கருத்துக் கூறியுள்ள டி.எம்.கிருஷ்ணா, “எவ்வாறு மறுத்தாலும், மாட்டைக் கொன்றால்தான் மிருதங்கம் கிடைக்கும் என்பதுதானே நிதர்சனம். திட்டமிட்டபடி பிப்ரவரி 2-ஆம் தேதி மாற்று இடத்தில் புத்தக வெளியீடு நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.