ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா நிகழ்ச்சி அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கலந்துக்கொண்டு பேசினார்.
அதில், ”நடந்து முடிந்த தேர்தலில் சத்தியமங்கலம் பகுதியில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று சேர்மேனாக வந்துள்ளனர். இதன் மூலம் அவர்களால் என்ன செய்யமுடியும். அவர்கள் வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியான நாங்கள் தான் நிதியளிக்கவேண்டும். அப்போது தான் அவர்களால் வேலை செய்யமுடியும்.
தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு பணம் குறைவாக தான் ஒதுக்குவோம்.” என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு தி.மு.கவினர் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பழிவாங்கும் நோக்கில் பேசியதாக அமைச்சர் கருப்பண்ணனுக்கு எதிராக புகார்களும் கண்டனமும் எழுந்துள்ளது. கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அமைச்சர் கருப்பண்ணனுக்கு எதிராக புகார் மனு ஒன்றை தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், ”அமைச்சர் கருப்பண் ணன் தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கைகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறிவிட்டதாகவும், ஆட்சியின் மரபை மீறி நடந்துக்கொண்ட ஒருவர் இனியும் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்று துரை முருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-விற்கு வாக்களித்த மக்களை பழிவாங்கும் நோக்கோடு அமைச்சர் பேச்சு இருப்பதாக குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தொடர்பாக வெளியான பத்திரிக்கை செய்திகளையும் இணைத்தும் அவர் அந்த கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.