மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தொடர்புடைய வழக்கில், முதலில் வழக்கறிஞர் மகாலிங்கம் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். அதன்பிறகு, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சருக்காகத்தான் பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரிப் பெண்களை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “குற்றம்சாட்டப்பட்ட நிர்மலாதேவி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை கலைச்செல்வன் தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்களுக்காகத்தான் கல்லூரிப் பெண்களை தவறான பாதைக்கு அழைத்தார்.
இந்தத் தகவல்களை பேராசிரியை நிர்மலாதேவி என்னிடம் தெரிவித்தார். இதுகுறித்தும் வழக்கின் உண்மைகள் குறித்தும் வெளியே சொன்னால் உனது மகளை கடத்திவிடுவோம் என வருவாய்த்துறை அமைச்சர் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்தார்.” என்றார்.
மேலும், மிரட்டல் காரணமாக நிர்மலா தேவி வாய்மூடி மவுனமாக இருப்பதால், வழக்கு நேர்மையாக நடக்காமல் திசை மாற வாய்ப்புள்ளதால் நேர்மைக்கு மாறாக தாம் செயல்பட விரும்பாத காரணத்தாலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.
உயரிய பொறுப்புகளில் இருப்பவர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடுமை தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தமிழக ஆளுநர், ஆளுங்கட்சி அமைச்சர் ஆகியோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கில் முன்னேற்றமின்றி இருந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.