நாடு முழுவதும் பாலியல் ரீதியிலான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. கலாசாரக் காவலர்களாக முகம் காட்டும் இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் பலரும் பாலியல் குற்ற விவகாரங்களில் சிக்கி வருகின்றனர். பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் முதற்கொண்டு பல்வேறு இந்து மகாசபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது நிரஞ்சனி என்ற பெண் நிர்வாகி கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதில், திருவள்ளூரைச் சேர்ந்த நிரஞ்சனி (40) என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு அனைத்திந்திய இந்து மகா சபாவின் மகளிர் பிரிவில் மாநில செயலாளராக இணைந்துள்ளார். அதன் பிறகு ஸ்ரீகண்டனுக்கு மொழி பிரச்னை இருப்பதால் அவருடன் அவ்வப்போது டெல்லிக்கு சென்று வந்துள்ளார்.
அந்த சமயத்தில் தனக்கு ஸ்ரீகண்டன் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தி வந்ததால் இந்து மகாசபாவில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், தன் குடும்பத்தினரை மிரட்டியும், தன்னைப் பற்றி அவர்களிடம் கீழ்த்தரமாகப் பேசியும் வந்துள்ளார் ஸ்ரீகண்டன் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஸ்ரீகண்டன் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.