சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி சாலைகளில் பொதுமக்கள் தங்களது குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வீடுகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைை கொட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் 2 முறை மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிகளில் உள்ள குப்பை அகற்றப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
அதேபோல், லாரிகள் செல்ல முடியாத தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் ரிக்சா வண்டிகள் மூலம் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். குப்பையை மறு சுழற்சி செய்வதற்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும், என மாநகராட்சி பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளது.
ஒரு சிலர் இதை கடைபிடித்தாலும் பலர் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வெளியே செல்லும்போது சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், பல இடங்களில் சாலையோரம் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.
எனவே, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில இடங்களில், குப்பை கொட்டுவது என்பது, தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து, 'ஹாட் ஸ்பாட்' எனப்படும், அந்த இடங்களை கண்டறிந்து, குப்பை கொட்டுவதை தடுக்க முயற்சி எடுத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த முயற்சியை சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேல் முன்னெடுத்துள்ளார்.
அவரின் இந்த திட்டத்தின் படி, குப்பை தொட்டிகள் உள்ள இடத்தை தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்கள், அங்கு அழகான கோலங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் குப்பைகள் சாலையில் வீசப்படுவதை தடுக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த முயற்சிக்கு பரலரும் பாரட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். மேலும் பல மாநகராட்சி நிர்வாகம் இந்த முயற்சியை தங்களது பகுதியில் செய்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த முயற்சிக்கு தொடக்கபுள்ளியாக இருந்த சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்' என்ற புதிய யோசனையை மக்களிடம் கூறி மாநகரின் தூய்மை காக்கும் சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது!.
இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.