குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, மோடி மற்றும் அமித்ஷா குறித்து விமர்சனங்களை முன்வைத்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, பா.ஜ.கவினர் தூண்டுதலின் பேரில் நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நெல்லை கண்ணனை வரும் 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க நெல்லை நீதிபதி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். தற்போது நெல்லை கண்ணன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். நெல்லை கண்ணனை கைது செய்த நடவடிக்கை தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழக அரசு நெல்லை கண்ணனை கைது செய்ததற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?
இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால்தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?” எனத் தெரிவித்துள்ளார்.