வங்கிகள் சமீபகாலமாகவே வாடிக்கையாளர்களுக்கு அதிக நிபந்தனைகள் விதித்து, அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளன. அந்த வகையில், மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவரை கரூர் வைஸ்யா பேங்க் (KVB) அலைக்கழித்துள்ளது.
முரளி கிருஷ்ணன் நீண்டகாலமாக கரூர் வைஸ்யா வங்கியின் வாடிக்கையாளராக உள்ளார். சமீபத்தில் அவருடைய வங்கி காசோலை புத்தகத்தாள் தீர்ந்து போயுள்ளது. இதையடுத்து புதிதாக புத்தகம் பெற வங்கிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவர், வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்தால் தான் உங்களுக்கு புதிதாக காசோலை வழங்கமுடியும் எனக் கூறியுள்ளார். அப்படி எந்த நிபந்தனையும் வங்கிகளில் கிடையாதே என முரளி கிருஷ்ணன் கேள்வி எழுப்பியும், வங்கி நிர்வாகம் முறையாகப் பதிலளிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு முரளி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து ரிசர்வ் வங்கி முரளிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், வங்கி காசோலை புத்தகம் வழங்குவதற்கு, செல்போன் எண் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இரண்டு நாட்களில் வங்கியில் இருந்து முரளிக்கு காசோலை புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளனர். தனக்கு தேவை ஏற்பட்டபோது காசோலை புத்தகம் வழங்காமல் இழுத்தடித்த வங்கியால், பல நாட்களாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் இருந்ததால், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் முரளிகிருஷ்ணன்.
முரளியின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம் தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து முரளிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. வங்கி வாடிக்கையாளரை வேதனைப்படுத்திய வங்கிக்கு முரளி செய்த நடவடிக்கை சரியானதே எனப் பலர் பாராட்டி வருகின்றனர்.