குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்றைய தினம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களை கொண்ட கோலத்தை வரைந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அடையாறு சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலத்தை வரைவதற்கு அனுமதி மறுத்தனர். மேலும் கோலம் வரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் கோலமிட்டு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களைக் கைது செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “அலங்கோல அ.தி.மு.க அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது மற்றுமொரு உதாரணம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதையடுத்து தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, நாளைய தினம் பொதுமக்கள் வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அதனையடுத்து தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி வீட்டிலும் நேற்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போடப்பட்டது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் கோலம் இடப்பட்டுள்ளது. அதேப்போல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலமிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஒரு கோலத்தைக் கண்டு கூட அஞ்சும் அளவிற்கு அடிமை அ.தி.மு.க அரசின் ஆட்சி இருக்கிறது.
அரசின் இந்த மோசமான போக்கைக் கண்டித்து, மக்கள் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு இந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்கிற வகையில் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.