இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.81% வாக்குகள் பதிவு. - மாநில தேர்தல் ஆணையம் தகவல்!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் வேட்பாளர்களது சின்னம் வரிசை மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குகள் பதிவு. - மாநில தேர்தல் ஆணையம் தகவல்!
விருதுநகர் வில்லிபத்திரி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளர்களுக்கு வரிசைப்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் 1,3,5,7,9 ஆகிய வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டன.
மதுரை சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து வாக்குப்பதிவு நிறுத்தம்!
முதல் கட்ட தேர்தலில் வன்முறை நடைபெற்ற 30 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
ஊரக பகுதிகளில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 கிராம ஊராட்சி தலைவர், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
8 மணியாகியும் வாக்குப்பதிவு நிறைவடையவில்லை.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் எம்.செட்டிப்பட்டி ஊராட்சியில் வாக்குச்சாவடி 233ல் வாக்குப்பதிவு நிறைவடையவில்லை.
5 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து நிற்க வைக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதால் வாக்களர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3 மணி நிலவரப்படி 57.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவாகியுள்ளது. - மாநில தேர்தல் ஆணையம் தகவல்!
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபும் ஊராட்சி ஒன்றியம் தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாத்துரை குடும்பத்துடன் வாக்களித்தார்.
வாக்களிப்பதில் குழப்பம்!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மொத்தம் 47 ஊராட்சிகளிலும் 26 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும் 3 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதில் வாக்குச்சீட்டு மிகவும் சிறியதாக உள்ளதாகவும் சின்னங்கள் மிகவும் சிறியதாக இருப்பதாகவும் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை முறையாகச் செலுத்த முடியாமல் போவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தாமரைவனி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தாமரைவனி ராமச்சந்திரன் சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட வாக்குச் சீட்டு வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்கு சீட்டுகளை தூக்கி எறிந்து, போராட்டம் நடத்தப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முன்பு ஏராளமானோர் திரண்டு அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
“உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 10.04% வாக்குகள் பதிவு!" - தேர்தல் ஆணையர் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் ஊராட்சியின் 21வது வாக்குச்சாவடியில் வாக்குச் சீட்டில் தவறாக சின்னம் பொறிக்கப்பட்டதால் வாக்குப் பதிவு நிறுத்தம்!
சேலம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்பே அ.தி.மு.கவி-னர் பல வாக்குகளை செலுத்தியதால் பரபரப்பு!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள பொருளுதவி தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
“உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என தெரியவில்லை; வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக எந்த பதிவும் கிடையாது, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்று சூழ்நிலையை தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என நான் கருதுகிறேன்”
- கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்த செந்தில் பாலாஜி பேட்டி.
வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 27 மாவட்டங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் இணையதள கேமராக்கள் மூலம் கண்காணிப்பு.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், பெரும்பாலான பகுதிகளில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் முதல் முறையாக வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது. முதற்கட்டமாக இன்று 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.