தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (டிச.27) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்கள் நேற்று மாலையுடன் ஓய்ந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையே, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது அ.தி.மு.க அமைச்சர் நிலோபர் கபீல் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில், “நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.கவால் வெற்றிபெற முடியவில்லை. இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தி பேசியிருந்தார். அது தொடர்பான அமைச்சர் நிலோபர் கபீலின் பேச்சு குறித்த வீடியோவும் வைரலானது.
தொடர்ந்து பா.ஜ.கவுடனான கூட்டணி மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசி வருகிறார்.
ஆனால், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் எவ்வித ஆலோசனையுமின்றி முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.கவின் திட்டங்களுக்கு கண்மூடித்தனமாக எடப்பாடி பழனிசாமி தலையசைத்து வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.