சூரிய கிரகணம் தொடர்பான மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் சார்பில் சிற்றுண்டி உண்ணும் நிகழ்வு நடைபெற்றது.
சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் வெளியே வரக்கூடாது என்றும் உணவு உண்ணக்கூடாது என்னும் பல மூட நம்பிக்கைகளை இருப்பதால், அதை பொய் என விளக்கும் நடைமுறை வகுப்பு நடைபெற்றது.
அதன் ஒரு அங்கமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூரிய கண்ணாடி மூலம் கிரகணத்தைப் பார்த்தார். அதன்பின் திராவிட கழகத்தினருடன் ஒன்றுகூடி சிற்றுண்டி உண்டு மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக சிற்றுண்டி உண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, “சூரியன் சந்திரன் பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு தான் கிரகணம். இது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமான நிகழ்வு. கிரகணத்தை மூட நம்பிக்கையாக பின்பற்றுவது தவறு என்பதை உணர்த்த தான் இந்த நடைமுறை வகுப்பை திராவிட கழகத்தினர் நடத்திக் காட்டுகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், அனைவரின் வாழ்க்கையிலும் அறிவியல் உள்ளதாகவும் ஆனால் அறிவியல் பூர்வமான சிந்தனைகள் இல்லை என்பதை உணர்த்தவே இந்த சிற்றுண்டி உண்டு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை விளக்கும் நடைமுறை வகுப்பாக திராவிட கழகத்தினர் இதை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.