பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 46வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, இந்திய மக்கள் பலரும் பெரியாரின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி, பொய் பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கும்பல், பெரியாரின் நினைவு தினத்தன்றும் அவரை அமதிக்கும் வகையில் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுயமரியாதைக்காகப் போராடிய பெரியாரை தமிழக பா.ஜ.க இன்றைக்கு அவமதிக்க முயன்றது. தமிழக பா.ஜ.க, ட்விட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு, அதற்கு கடும் கண்டனம் எழுந்ததும் அந்தப் பதிவை நீக்கியது.
காலில் விழுவதும் மன்னிப்புக் கேட்பதும் பழகிப் போன ஒன்று என்பதால், தந்தை பெரியார் மீது அவதூறுச் சேற்றை இறைக்க இந்த உத்தியை கையாண்டுள்ளது பா.ஜ.க என பெரியாரிய உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.கவின் கீழ்த்தரமான செயலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பா.ஜ.க. அதை பதிவிடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அ.தி.மு.க, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் தமிழக பா.ஜ.க-வுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து, உடனடியாக தமிழக பா.ஜ.க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.