தமிழ்நாடு

“விவசாயிகள் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கிச் சீரழிய விரும்புகிறதா அரசு?” - வைகோ கண்டனம்!

விவசாயிகள் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கி வாழ்வாதாரத்தையே பறிகொடுக்கும் நிலைமையை அரசே உருவாக்குவது அநீதி எனத் தெரிவித்துள்ளார் வைகோ எம்.பி.,

“விவசாயிகள் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கிச் சீரழிய விரும்புகிறதா அரசு?” - வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விவசாயிகளுக்கு நகைக் கடன் வட்டி மானியம் நீடிக்க வழிவகை செய்திட வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7% வட்டி விகிதத்தில் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றன. இந்தக் கடன்கள், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கான தங்க நகைக் கடன் திட்டத்தின்படி, ஒரு லட்சம் ரூபாய் வரை நகைகளை ஈடு வைத்துக் கடன் பெற, கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் உடனடியாகக் கடன் அளிக்கப்படுகிறது. மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விவரங்களை வழங்க வேண்டும்.

இந்தக் கடன் திட்டப்படி விவசாயிகளுக்கு நகைக் கடன் 11% என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், மத்திய அரசு 4% மானியமாக வங்கிகளுக்கு அளிப்பதால் நகைக்கடன் வட்டி என்பது 7% மட்டுமே.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க் கடன்களை உரிய கால கட்டத்தில் திருப்பிச் செலுத்துகின்ற விவசாயிகளுக்குக் கூடுதலாக 3% வட்டி மானியம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4% என்ற குறைவான வட்டி விகிதத்தில் நகைக் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.

“விவசாயிகள் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கிச் சீரழிய விரும்புகிறதா அரசு?” - வைகோ கண்டனம்!

இந்நிலையில், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம், தற்போது 4% வட்டி மானியத்தைத் திடீரென்று ரத்து செய்திருப்பதால் விவசாய நகைக் கடன் வட்டி 7 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக அதிகரித்து விடுகிறது. விவசாய நகைக் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்று புகார்கள் எழுந்துள்ளதாக மத்திய அரசு இதற்குக் காரணம் கூறுகிறது.

வேளாண் நகைக் கடன் பெற விண்ணப்பிக்கின்றவர்களை ஆய்வு செய்து, கடன் வழங்க வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். உண்மையாகவே அரசின் வட்டி மானியத்தை விவசாயிகள் பெறுகிறார்களா என்று உரிய முறையில் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதை விடுத்துவிட்டு விவசாய நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தைத் திடீரென்று ரத்து செய்து இருப்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல் ஆகும். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

விவசாயிகள் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கி வாழ்வாதாரத்தையே பறிகொடுக்கும் நிலைமையை அரசே உருவாக்குவது அநீதியாகும்.

விவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்ட பா.ஜ.க அரசு, நகைக் கடன் வட்டி மானியத்தையும் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மத்திய அரசு, வேளாண் துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்து, விவசாயிகளுக்கு நகைக் கடன் வட்டி மானியம் நீடிக்க வழி வகை செய்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories