திருநெல்வேலியில் வயது முதிர்ந்த தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்து பறிமுதல் செய்யப்பட்டு முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பூதத்தான் (85). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி அம்மா பொண்ணு. இவருக்கு மகாலிங்கம் என்ற மகன் உள்ளார். இரண்டாவது மனைவி பார்வதி. இவருக்கு முருகன், செல்வி என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.
முருகன், அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். பூதத்தான் தனக்கு சொந்தமான வீடு மற்றும் 8 சென்ட் நிலத்தை முருகன் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால், அந்த சொத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டு, தந்தையை கவனிக்காமல் அவரை வீட்டிலிருந்து முருகன் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
சொத்துகளை எழுதி வாங்கியபோது தன்னுடைய தந்தையை பராமரித்துக் கொள்வதாக முருகன் உறுதியளித்து இருக்கிறார். ஆனால், தந்தையை பராமரிக்காமல் வீட்டில் இருந்து விரட்டியதையடுத்து பூதத்தான், தனது மூத்த மனைவியின் மகன் மகாலிங்கம் வீட்டுக்குச் சென்று தங்கி இருக்கிறார்.
இதையடுத்து மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் மூலம் தன்னை பராமரிக்காமல் வீட்டிலிருந்து வெளியேற்றிய மகனிடம் இருந்து சொத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா, சார் ஆட்சியர் மணீஷ் நாரணவரே ஆகியோரிடம் மனு அளித்தார் பூதத்தான்.
அந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர், முருகனிடம் இருந்து சொத்தை பறிமுதல் செய்து பூதத்தான் வசம் திரும்ப ஒப்படைத்தார். அதற்கான ஆணையை சார் ஆட்சியர் மணிஷ் நாரணவரே நேற்று பூதத்தானை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரிடம் வழங்கினார்.