குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.கவுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினரும். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தி.மு.க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது இது குடியுரிமை சட்டமா? மக்களுக்கு குழி பறிக்கும் சட்டமா? என முழக்கமிட்டனர்.
அப்போது பேசிய தயாநிதிமாறன், “குடியுரிமை சட்டத்திருத்தத்தை இயற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை திசைத்திருப்புவதே பா.ஜ.கவின் திட்டம். இந்தி பேசுவோரின் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பா.ஜ.க செயல்படுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எங்கள் அரசு பாதுகாப்பாக உள்ளது என பா.ஜ.க கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. குடியுரிமை சட்டம் இந்தி பேசும் இந்துக்களுக்கு ஆதரவாகவும், தமிழ் பேசும் இந்துக்களுக்கு எதிராகவுமே பா.ஜ.க இதனை கொண்டு வந்துள்ளது.
இந்த குடியுரிமை சட்டத்துக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அனுமதிக்காது. சிறுபான்மையினரின் பாதுகாவலனாக தி.மு.க என்றுமே இருக்கும்” என தயாநிதிமாறன் கூறினார்.