கூட்டணிக்காக குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
மதவாத அரசியலை முன்னெடுத்துவரும் பா.ஜ.கவின் அடுத்த முயற்சியாக அமைந்துள்ளது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த மசோதாவை பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி மக்களவையில் நிறைவேற்றியுள்ளது மோடியின் மத்திய அரசு.
அதேபோல், கூட்டணி கட்சி எம்.பிக்களின் ஆதரவோடு மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததில் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சிகளாகக் காட்டிக்கொள்ளும் அ.தி.மு.க, பா.ம.கவும் அடக்கம்.
மசோதாவுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தமிழகத்திலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதற்காகவே குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்றும், இது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
ராமதாஸின் இந்தப் பேச்சு “ஈயம் பூசியது போலவும், பூசாதது போலவும்” இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.