இஸ்லாமியர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றியுள்ளது.
இதனால் வடகிழக்கு மாநில மக்கள் மோடி அரசின் மீது கடுமையான கோபத்தில் உள்ளதோடு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, குடியுரிமை மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரலெழுப்பினர். இந்திய நாட்டை மதவாதத்தால் பிரிக்க முயலும் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர்.
ஆனால், அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக்கொண்டு கூட்டணி தர்மத்துக்காகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பா.ஜ.கவின் அனைத்து அசைவுகளுக்கும் எவ்வித சஞ்சலமும் இல்லாமல் கண்ணை மூடி ஆதரவு தெரிவித்து வருகிறது எடப்பாடியின் அ.தி.மு.க அரசு.
அது தற்போது நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிலும் தொடர்ந்துள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான மசோதாவுக்கு அவர்களிடம் இருந்தே வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்திருக்கிறது அ.தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும்.
இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பலர் ட்விட்டரில் #தமிழினதுரோகிADMKபிஜேபிPMK என்ற ஹேஷ்டேக்கிலும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தமிழக அளவில் முன்னிலையில் உள்ளது.
மேலும், குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தி.மு.க எம்.பிக்களுக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க மறக்கவில்லை.