சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 2ம் தேதி நடந்த விழாவில், முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான பிரெஞ்சு, இந்தி, வங்கம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தார்.
மேலும், சென்னையில் உள்ள இந்தி பிரசார சபா மூலம் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்றுவிப்பதற்கு முன்னாள் தி.மு.க அமைச்சரும் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கடுமையான கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அதேபோல, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயற்சி அளிப்பதை கண்டித்து எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க மாணவர் அணி சார்பில் மத்திய கைலாஷ் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று அளித்த பேட்டியில், ’’உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டது. இந்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படும்.
தமிழ் தவிர்த்த பிற மொழிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை என்பதால்தான் முன்பு இந்தியை தேர்ந்தெடுத்தோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுத்தர எடுத்த முடிவை திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுத்தர எடுத்த முடிவை, தி.மு.க முன்னெடுத்த போராட்டம் காரணமாக திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன்.
தமிழைக் காக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள்!'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.