சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிமென்ட் சாலை, மழைநீர், கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆற்று மணல் ஒரு கனஅடியின் விலை 120 ரூபாய் என்ற நிலையில், எம்.சாண்ட் கனஅடியின் விலை 60 ரூபாய் என விற்கப்படுகிறது. தற்போது இதனை பயன்படுத்திதான் சென்னை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் எம்.சாண்டினை பயன்படுத்திவிட்டு ஆற்று மணலுக்கு இணையாக கட்டணத்தை பில் போட்டு பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. ஆற்று மணலை தொடர்ந்து எம்.சாண்டிலும் அ.தி.மு.க அரசு ஊழல் செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.