மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் நேற்று காலை தடுப்புச் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் நான்கு வீடுகளைச் சேர்ந்த 17 பேர் உடல் நசுங்கியும், மண் மூடியும் உயிரிழந்தனர்.
நடூர் ஏ.டி காலனி பகுதியில் துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களாவை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு அருகிலிருந்த வீடுகளின் மேல் விழுந்து தரைமட்டமாக்கியது. இதனால் அந்த வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நீதி வேண்டியும், சுற்றுச்சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர். தமிழ்ப்புலிகள் கட்சியினரும் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க, போலிஸார் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை போலிஸார் மிருகத்தனமாகத் தாக்கி தரதரவென இழுத்துச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட ஏராளமானோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்ற போலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
உயிரிழப்பிற்குக் காரணமான சுற்றுச்சுவரைக் கட்டிய துணிக்கடை உரிமையாளரை கைது செய்யாமல், துயரச் சம்பவத்திற்கு நியாயம் கேட்டுப் போராடியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்துக் கைது செய்திருப்பதற்கு தமிழகம் முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் நாகை திருவள்ளுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.