கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் இவர் அப்பகுதியில் சக்ரவர்த்தி துகில் மாளிகை என்கிற துணிக்கடையை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் இவரது பங்களாவின் சுற்றுச்சுவர் இடிந்து, அருகே இருந்த 4 வீடுகள் மீது விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, அரசு நிர்வாகம் மற்றும் சிவசுப்ரமணியத்தின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வேண்டியும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது போலிஸார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த விபத்தில் தந்தையைப் பறிகொடுத்த குடும்பத்தினரை தனியார் செய்தி சேனல் ஒன்று பேட்டி கண்டது.
அப்போது, தந்தை பறிக்கொடுத்த பள்ளி மாணவி ஒருவர் அழுதுகொண்டே கண்ணீர் வழிய அளித்த பேட்டியில், “எனக்கு புக்கும், நோட்டும் மட்டும் தந்தீங்கனா போதும், எங்க அம்மாவ நான் காப்பாத்தி உட்ருவேன். எங்க அப்பாதான் எங்களைவிட்டுப் போயிட்டார்” என்று சொல்லி, பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் மனைவி பேசுகையில், “எங்கள் வீட்டில் நாங்கள் 3 பேர்தான். எனது உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் நாங்கள் வெளியே சென்று இருந்தோம். எனது கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். காலையில் வேலைக்குச் செல்லவேண்டும் என இரவு 11 மணிக்குதான் தூங்குவதற்கு வீட்டுக்கு வந்தவரை, காலையில் பிணமாகத்தான் பார்த்தேன்” என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.