கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இயேசுராஜ் என்பவர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பொன்.கெளதமசிகாமணியின் தொடர் முயற்சியால் குவைத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது தமிழகம் திரும்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளக்குறிச்சி நகரத்திற்கு அருகே உள்ள ரங்கநாதபுரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த இயேசு ராஜ் என்பவர் குவைத்தில் டிரைவராக பணிபுரியச் சென்றார். பணிக்குச் சென்ற இடத்தில் ஒரு வாகன விபத்து ஏற்பட்டது. அந்த வாகன விபத்திற்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லாதபோதும் இவர் அங்குள்ள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தார், கள்ளக்குறிச்சி எம்.பி., கௌதமசிகாமனியிடம் இயேசு ராஜ் குவைத் சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வருவது குறித்து தெரிவித்து, அவரை விடுதலை செய்து தமிழகத்திற்கு மீட்டுவர உதவிசெய்ய வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இயேசு ராஜ் குடும்பத்தாரின் சூழ்நிலையை எடுத்துக் கூறி அவரை உடனடியாக விடுதலை செய்து அவரை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் தமிழகம் திரும்ப சில காலம் ஆகும் என தெரிவித்திருந்தனர். கள்ளக்குறிச்சி தி.மு.க எம்.பி., பொன்.கெளதமசிகாமணியின் தொடர் முயற்சியால் அவர் தற்போது தமிழகம் திரும்பியுள்ளார்.
தமிழகம் திரும்பிய இயேசு ராஜ் அவர் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரும், அவரது குடும்பத்தாரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கெளதமசிகாமணிக்கு தங்களது மேலான நன்றியை அலைபேசி காணொளி மூலம் தெரிவித்தனர்.