தமிழ்நாடு

மாற்றுச் சீருடையுடன் இடுப்பளவு நீரில் மூழ்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் - நாகை அருகே அவலம்!

நாகை மாவட்டத்தில் மரப்பாலம் உடைந்ததால் பள்ளி மாணவர்கள் இடுப்பளவு தண்ணீரில் தினமும் நீந்திச்செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது.

மாற்றுச் சீருடையுடன் இடுப்பளவு நீரில் மூழ்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் - நாகை அருகே அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ளது ஒக்கூர் கிராமம். சுமார் 1500 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

இவர்கள் அக்கிராமத்தில் இருந்து நாகை டவுன் பகுதிக்கு வெட்டாற்றில் விளாம்பாக்கம் - கோகூர் இடையே உள்ள மரப்பாலம் வழியே தான் வரவேண்டும்.

அப்படி இல்லையென்றால் 10 கி.மீ தூரம் விளாம்பாக்கத்தை சுற்றி மாற்றுபாதையில் தான் செல்லமுடியும். இந்நிலையில் கடந்த 2 மாத்திற்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து தீடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளம் மரப்பாலத்தை அடித்துச் சென்றது. மரப்பாலம் முழுவதும் சேதமடைந்து நீருக்குள் முழ்கியது.

உடைந்த மரப்பாலம்
உடைந்த மரப்பாலம்

இதனால், அப்பகுதி கிராம மக்கள் 10 கி.மீ தூரம் சென்று டவுன் பகுதிக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் காலையில் 10 கி.மீ தூரம் சென்று பள்ளிக்குப் போகமுடியாது என்பதனால், ஆற்றுக்குள் இறங்கி செல்கின்றனர்.

ஆற்றுக்குள் இறங்கிச் செல்லும் போது ஆடைகள் ஈரமாகிவிடும் என்பதனால் மாணவர்கள் சில மாற்று ஆடையும் பையில் எடுத்துச்செல்கின்றனர். ஆற்றின் கரையைக் கடந்ததும் பையில் இருக்கும் ஆடையை மாற்றிவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர்.

சில சமயங்களில் கால் வழுக்கி தண்ணீருக்குள் புத்தக பைகளோடு மாணவர்கள் மூழ்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. பெற்றோர்களும் மாணவர்களை தோளில் சுமந்து பள்ளிக்குச் சென்று விட்டுவிட்டு வருகின்றனர்.

எனவே, இந்தப் பகுதியில் உடனடியாக கான்கிரீட் பாலம் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories