திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிவித்தார்.
அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்தப் பதவியை வழங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை மாவட்ட பால உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்தது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியாக கூறுப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை.
விதிகளின் படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவு பால் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கும் சங்கம் நிறைவேற்றி இருப்பதற்கான ஆவணங்களும் இல்லை. எனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்யக் கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கூட்டுறவு விதிகளைப் பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக பதவி நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.