முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில், உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை கவனித்துக் கொள்வதற்காகவும், தனது சகோதரி மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்க்காவும் பரோலுக்கு விண்ணப்பித்தார் பேரறிவாளன்.
இதையடுத்து, கடந்த நவம்பர் 12-ம் தேதி தமிழக அரசு அனுமதியின்படி பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். இது பேரறிவாளனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பரோல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது சகோதரி அன்புமணி ராசாவின் மகள் செவ்வை மற்றும் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கௌதமன் ஆகிய இருவருக்கும் இன்று கிருஷ்ணகிரியில் இணையேற்பு விழா நடைபெற்றதையொட்டி, குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் பேரறிவாளன்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சென்றார் பேரறிவாளன். இந்த இணையேற்பு நிகழ்வில் சத்யராஜ், பொன்வண்ணன் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.
பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர், குழுவினருடன் இணைந்து பறை இசைத்தனர். பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.