மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை மறைமுக நடைமுறையில் தேர்வு செய்யும் அதிமுக அரசின் அவசர சட்டத்திருத்தத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாகவே கருதுவதால் மக்களை நேரடியாக சந்திக்க ஆளுங்கட்சிக்கு தயக்கம் இருப்பதாக குறிப்பிட்டார். மறைமுக தேர்தல் மூலம் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி பதவிகளை கைப்பற்றிவிடலாம் என்ற அதிமுக அரசின் முயற்சியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முறியடிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுகத் தேர்தல் நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.
அதுபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறித்துள்ள அதிமுக அரசின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலேயே தேர்தல் முறையையே அதிமுக அரசு மாற்றியமைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதாக அதிமுக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது என பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.