நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்திற்கு ப.சிதம்பரம் மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா போன்றோர் அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கைக் குறித்து மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கிடைக்காமல், 90 நாட்களுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வருகிறார். தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துவரும் நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் அவ்வபோது இந்திய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அதனையடுத்து தற்போது பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதுமே, தவறான நிர்வாகத்தால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எதிர்கட்சிகள் அம்பலப்படுத்த வேண்டும். அதனை காங்கிரஸ் தலைமையேற்று வழி நடத்தவேண்டும்.
மேலும், பொருளாதாரத்தின் எந்த அம்சம் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அப்படி ஒன்று இல்லை.,” என்று கிண்டலடித்துள்ள அவர் மற்றொரு ட்விட்டர் பதிவில், அரசில் அறிவில்லை, நியாயமான விமர்சனத்தையும், உண்மையான ஆலோசனையும் ஏற்க மறுக்கிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.