தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலக்குறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாவதும் நிகழ்கிறது. ஆனால் அ.தி.மு.க அரசோ டெங்கு ஒழிப்பு பணிகளில் சுணக்கம் காட்டி வருகிறது.
மேலும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போரை மர்மக்காய்ச்சலால் உயிரிழந்ததாக தமிழக அரசு கூறி வருகிறது. இந்நிலையில், சேலம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்த தாரமங்கலம் கோனேரி வலவு பகுதியைச் சேர்ந்த அனுஸ்ரீ என்ற 7 வயது சிறுமி நான்கு தினங்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தாரமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
காய்ச்சல் அதிகமானதால் நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பெண் குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.